திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சஞ்சீவி நகர் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பழைய பாலம் சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டுள்ளது.
பராமரிப்புப் பணிகள் காரணமாக கடந்த நான்கு மாதங்களாகப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தற்போது பாலம் மீண்டும் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளது.
1963-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பாலத்தில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு விரிவான சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், பாலத்தின் தாங்கு உருளைகளை மாற்றுதல், விரிவாக்க இணைப்புப் பகுதிகளைச் சீரமைத்தல், தாங்குத் தூண்களைப் பராமரித்தல், பாலத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பாலம் மூடப்பட்டிருந்ததால் வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதைகளில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது பாலம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.